×

10 நாள் அஞ்சலிக்குப் பின் அரசு மரியாதையுடன் ராணி 2ம் எலிசபெத் உடல் நல்லடக்கம்: ஜனாதிபதி முர்மு உட்பட உலக தலைவர்கள் பங்கேற்பு; இங்கிலாந்து முழுவதும் 2 நிமிடம் மவுன அஞ்சலி

லண்டன்: மறைந்த இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் உடல், 10 நாள் அஞ்சலிக்குப் பின் லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் அரச மரியாதையுடன் கணவர் இளவரசர் பிலிப் உடல் அருகே நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.இங்கிலாந்து நாட்டின் ராணியாக கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த 2ம் எலிசபெத் உடல் நல குறைவினால் கடந்த 8ம் தேதி தனது 96வது வயதில் காலமானார். அவரது உடல் ஸ்காட்லாந்தில் உள்ள பால்மோரல் அரண்மனையில் இருந்து எடின்பர்க் கொண்டு செல்லப்பட்டு, பொது மக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு 8 கி.மீ. தூரம் நீண்ட வரிசையில் 14 மணி நேரம் காத்திருந்து மக்கள் அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் அவரது உடல் அங்கிருந்து வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் உலக தலைவர், நாடுகளின் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்துவதற்காக நேற்று காலை 6 மணி வரை வைக்கப்பட்டது. இதில், இந்தியா தரப்பில் பங்கேற்ற ஜனாதிபதி திரவுபதி முர்மு ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில், மறைந்த ராணியின் உடல் நேற்று மாலை 3.30 மணியளவில் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் இருந்து ஜார்ஜ் சந்திப்பு, விக்டோரியா சந்திப்பு உள்ளிட்ட லண்டனின் முக்கிய சாலைகள் வழியாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது சாலையின் இருபுறங்களிலும் மக்கள் கூடி நின்று தங்களது பிரியமான ராணிக்கு பிரியா விடை கொடுத்தனர். பின்னர் இந்த ஊர்வலம் திருப்பலி நடைபெறும் புனித கில்ஸ் பேராலயத்தை சென்றடைந்தது. ராணியின் உடல் வைக்கப்பட்டிருந்த பழமை வாய்ந்த அலங்கரிக்கப்பட்ட சவப்பெட்டியை இங்கிலாந்தின் முப்படைகளை சேர்ந்த வீரர்கள் உள்பட 6,000 பேர் ஊர்வலமாக எடுத்து சென்றனர். ராயல் கப்பற்படையின் 142 மாலுமிகள் 123 ஆண்டு பழமை வாய்ந்த பீரங்கி எடுத்துசெல்லும் வண்டியில் வைத்து வெஸ்ட்மின்ஸ்டர் அபேவுக்கு இழுத்து சென்றனர்.இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட ராணியின் 4 பிள்ளைகள், அவரது 8 பேரப்பிள்ளைகள் அவர்களது மனைவியர் உள்பட அரச குடும்பத்தை சேர்ந்த அனைவரும் இறுதி வரை நடந்தே சென்றனர். அரச குடும்பத்தில் இருந்து மட்டும் 2,000 பேர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றனர். இதில், இளவரசர் வில்லியம் மற்றும் கேத் தம்பதியினரின் மகன் இளவரசர் ஜார்ஜ் (9), மகள் இளவரசி சார்லோட் (7) ஆகியோரே சிறுவர்களாவர். மன்னர் சார்லஸ் அரச உடையில் அனைத்து பதக்கங்களுடனும், 2012ம் ஆண்டு ராணி அவருக்கு பரிசளித்த பீல்டு மார்ஷல் கைத்தடி உடன் இருந்தார். ராணியின் உடல் 32 கி.மீ. நீண்ட பயணத்துக்கு பின்னர் வின்ட்சரில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அரச குடும்பத்தினர் மட்டும் ராணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் வகையில், அவரது உடல் அரச குடும்பத்தினரின் உடல்களை வைக்கும் பெட்டகத்தின் அருகே கீழே இறக்கப்பட்டது. பின்னர் பேராயரிடம் சவப்பெட்டி ஒப்படைக்கப்பட்டது. மவுன அஞ்சலிக்கு பிறகு முப்படைகளின் இசை மரியாதை செலுத்தப்பட்டது. இங்கிலாந்து திருச்சபையின் காண்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி இறுதி சடங்கிற்கு தலைமை வகித்தார். ராணியின் கிரீடம் உள்ளிட்டவை மன்னர் சார்லசின் மனைவி கமீலாவிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு, மன்னர் ஆறாம் ஜார்ஜ் நினைவு சிற்றாலயத்தில், மறைந்த கணவர் இளவரசர் பிலிப் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் அருகே இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ராணியின் இறுதி சடங்கு முடிந்த பின்னர்,  இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 2 நிமிடம்  மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.பிரமாண்ட திரைகளில் நேரடியாக ஒளிபரப்பு*  வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் இறுதி சடங்கு தொடங்கும் முன்பு, ராணியின் வயதை குறிக்கும் வகையில் அப்பேராலயத்தின் மணி 96 முறை அடித்து ஒலிக்கப்பட்டது.* ராணி, இளவரசர் பிலிப் திருமணத்தின் போது 1947ம் ஆண்டு வெஸ்ட்மின்ஸ்டர் அபேவில் பாடப்பட்ட `தி லார்ட் இஸ் மை ஷெப்பர்ட்’ பாடல் இறுதி ஊர்வலத்தின் போது பாடப்பட்டது. அதை தொடர்ந்து, காமன்வெல்த் பொது செயலர் பாட்ரீசியா, இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ் வாசகங்களை வாசித்தனர்.* இறுதி ஊர்வலம் மற்றும் சடங்கு நிகழ்ச்சிகள் இங்கிலாந்து முழுவதும் உள்ள பூங்காக்கள், சதுக்கங்கள், திரையரங்குகளில் பெரிய திரைகளில் நேரடி ஒளிபரப்பானது.* இறுதி சடங்கில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ், மியான்மர், ஆப்கானிஸ்தான், சிரியா, வெனிசுலா ஆகிய 7 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை….

The post 10 நாள் அஞ்சலிக்குப் பின் அரசு மரியாதையுடன் ராணி 2ம் எலிசபெத் உடல் நல்லடக்கம்: ஜனாதிபதி முர்மு உட்பட உலக தலைவர்கள் பங்கேற்பு; இங்கிலாந்து முழுவதும் 2 நிமிடம் மவுன அஞ்சலி appeared first on Dinakaran.

Tags : Queen Elizabeth II ,President Murmu ,England ,London ,Westminster Abbey ,President ,Murmu ,
× RELATED மலர்களோடு பூத்துக் குலுங்கும்